யானை தாக்கி தொழிலாளி சாவு வனப்பகுதியில் விறகு பொறுக்கியபோது பரிதாபம்

தொழிலாளி சாவு

Update: 2022-11-09 20:34 GMT

கடம்பூர் அருகே வனப்பகுதியில் விறகு பொறுக்கிய தொழிலாளி யானை தாக்கி பரிதாபமாக இறந்தார்.

தொழிலாளி

கடம்பூர் அருகே உள்ள காடகநல்லி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சித்து (வயது 55). இவருடைய மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் சித்து தனியாக வசித்து வந்தார். கூலி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சித்து நேற்று முன்தினம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட காடகநல்லி வனப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் சித்து வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் நேற்று அவரை தேடிச்சென்றனர்.

யானை தாக்கி சாவு

அப்போது சித்து பெருமடுவு பள்ளம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் சித்து இறந்து கிடந்தார். இதனைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கடம்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று, சித்து உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது உடலில் யானை மிதித்ததற்கான அடையாளங்கள் இருந்தன. சிறிது தூரத்தில் யானை பிளிறும் சத்தமும் கேட்டது. எனவே விறகு பொறுக்கிக்கொண்டு இருந்த சித்து யானை தாக்கி இறந்தது தெரிய வந்தது. பின்னர் சித்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்