தொழிலாளி வெட்டி படுகொலை

புதுக்கோட்டையில் சொத்து தகராறில் தொழிலாளியை வெட்டி படுகொலை செய்த அண்ணன் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-01 18:51 GMT

சொத்து தகராறு

புதுக்கோட்டை டி.வி.எஸ். சண்முகாநகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 45). ஆக்டிங் டிரைவரான இவர் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மத மாற்றம் செய்துக்கொண்டு மும்தாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார். தமிழ்செல்வனுக்கு சிறுநாங்குப்பட்டியில் வசிக்கும் ராஜேந்திரன் என்ற அண்ணன் உள்பட மற்றொரு சகோதரரும், சகோதரியும் உள்ளனர். இந்த நிலையில் சிறுநாங்குப்பட்டியில் 23 சென்ட் இடத்தை விற்பது தொடர்பாக ராஜேந்திரனுக்கும், தமிழ்செல்வனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது.

வெட்டி படுகொலை

இந்த நிலையில் தமிழ்செல்வன் நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ். சண்முகாநகரில் வீட்டு வாசலில் நின்ற போது மர்மநபர்கள் 4 பேர் மோட்டார் சைக்கிளில் திடீரென வந்து, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்செல்வனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் தமிழ்செல்வனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

4 பேருக்கு வலைவீச்சு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ராஜேந்திரன் மகன் மதிவாணன் மற்றும் 3 பேர் சேர்ந்து தமிழ்செல்வனை கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் சொத்து தகராறில் இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலையான தமிழ்செல்வனின் உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின் நேற்று அவரது குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகள் 4 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

சிறுவன் உள்பட 6 பேர் கைது

மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலையான தமிழ்செல்வனின் அண்ணன் ராஜேந்திரன் மகன் மதிவாணன் (வயது 24), திருக்கோகர்ணத்தை சேர்ந்த ரகுமான் (19), கீழ விழாக்குடியை சேர்ந்த வசந்தகுமார் (24), புதுக்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் (22), வெங்கடேசன் (27) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து தகராறு காரணமாக தான் தமிழ்செல்வனை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தததாக மதிவாணன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்