3-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

3-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை

Update: 2022-11-21 18:45 GMT

சிங்காநல்லூர்

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 3-வது மாடியில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

கோவை கணபதி அருகே உள்ள சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), தொழிலாளி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஆறுமுகம், தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் குடித்து வந்துள்ளார்.

இதற்கிடையே அவர் கடந்த சில மாதங்களாக 24 மணி நேரமும் குடித்துக்கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளித்து குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர உறவினர்கள் முடிவு செய்தனர்.

சிகிச்சைக்காக அனுமதி

இதற்காக அவர்கள் ஆறுமுகத்தை கோவை சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இருக்கும் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் சிகிச்சை பிரிவில் கடந்த 18-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆறுமுகம், சிகிச்சை எடுத்துக்கொள்ள சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததுடன், சிகிச்சை கொடுக்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து உள்ளார். அத்துடன் அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் ஆறுமுகத்தை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

இதற்கிடையே நேற்று அதிகாலையில் ஊழியர்கள் ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளிக்க சென்றனர். அப்போது அவர் இருந்த அறையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே யாரும் இல்லை. அக்கம் பக்கத்தில் உள்ள அறைகளில் தேடிப்பார்த்தனர். அங்கும் அவர் கிடைக்கவில்லை. அப்போதுதான் ஆறுமுகம் அந்த ஆஸ்பத்திரியில் உள்ள 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்