தொழிலாளி உயிரோடு எரித்துக்கொலை; தாயை தாக்கியதால் அண்ணன் வெறிச்செயல்
நாங்குநேரி அருகே தொழிலாளி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். தாயை தாக்கியதால் வெறிச்செயலில் ஈடுபட்ட அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் வானமாமலை (வயது 30). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் கடந்த 5-ந் தேதி இரவில் மதுபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர் வானமாமலை மீது தீ வைத்து சென்றார். இதில் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் அலறியடித்து வெளியே ஓடினார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று, வானமாமலையை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நாங்குநேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடயவியல் துறையினர் அங்கிருந்த பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வானமாமலையை அவரது அண்ணன் குபேந்திரா (32) தீவைத்து உயிரோடு எரித்தது தெரியவந்தது. அதாவது, வானமாமலை மதுபோதையில் தாயார் வெள்ளத்தாயை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த குபேந்திரா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டு இருந்த வானமாமலை மீது தின்னரை ஊற்றி தீவைத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கொலை முயற்சி வழக்கில் போலீசார் குபேந்திராவை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் வானமாமலை பரிதாபமாக இறந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.