தர்காவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு வக்ப் வாரிய கோரிக்கையை ஏற்று நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி 45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்க முதல்-அமைசர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-11-19 14:42 GMT

சென்னை,

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் கோரிக்கையினை ஏற்று தமிழ்நாடு அரசு வனத்துறையில் இருப்பில் உள்ள சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்கி வருகின்றது. அதன்படி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.11.2024) முகாம் அலுவலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை நிர்வாக அறங்காவலர் சையது முகமது காஜி ஹூசைன் சாஹிப் மற்றும் நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் சையது முகமது கலீபா சாஹிப் ஆகியோரிடம் வழங்கினார்.

இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார். பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் விஜயராஜ் குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) ஸ்ரீனிவாஸ் ரெட்டி, மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் நாகூர் ஏ.எச். நஜிமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்