சென்னை: பட்டப்பகலில் இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு சம்பவம்
மர்மநபர் நடத்திய தாக்குதலில் பெண்ணுக்கு கையில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது.;
சென்னை,
சென்னை அயனாவரம் கே.எஸ் சாலையில் இளம்பெண் இளைஞர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஓட்டலில் இருந்து பார்சல் வாங்கிக் கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது திடீரென வந்த மர்ம நபர் ஒருவர் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து அந்த இளைஞரை அரிவாளால் சர மாரியாக வெட்டத் தொடங்கினார். இளம்பெண் அதனைத் தடுக்க முயன்ற நிலையில் அவரையும் கையில் அந்த மர்ம நபர் வெட்டினார்.இதில் அந்த பெண்ணுக்கு கையில் வெட்டுக்காயம் விழுந்துள்ளது.
உயிருக்கு பயந்து பெண்னுடன் வந்திருந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அருகில் இருந்த கடைகளில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் பட்டப்பகலில் இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் சரமாரியாக வெட்ட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.