சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடங்கி வைத்தார்.;
சென்னை,
கடந்த 2023ம் ஆண்டு முதல் சென்னையில் பன்னாட்டு புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தாண்டு (2025) 3 வது பன்னாட்டு புத்தகத் திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்று (ஜன.16) முதல் சனிக்கிழமை (ஜன.18) வரையிலான 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் அமெரிக்க, மலேசியா, பிரான்ஸ் உள்ளிட்ட 65 சர்வதேச நாடுகளை சேர்ந்த புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த திருவிழா நடைபெறும் 3 நாட்களும் நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு முதல் முறையாக இந்த திருவிழா நடைபெற்றப்போது 24 நாடுகளும், 2024ம் ஆண்டு 40 நாடுகளும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
புத்தகத் திருவிழா தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியதாவது , "66 தமிழ் புத்தகங்கள் 32 மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துகள் 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பெரியாரின் கருத்துகளை அறிவியல் சார்ந்த நடைமுறைகளாக பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட 30 நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 18ம் தேதி சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியில் வெளியிட உள்ளார். மிழை உலகளாவிய அளவிற்கு மொழிபெயர்க்க 35 இலக்கிய வல்லுநர்களை நாம் பயிற்சி செய்துள்ளோம்". இவ்வாறு அவர் கூறினார்.