ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே குடும்பத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணனை போலீசார் கைது செய்தனர்
குடும்பத்தகராறு
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார்கோட்டை வடக்கு சோழகன்தெருவை சேர்ந்தவர் சாமி அய்யன். இவருடைய மகன் ஸ்ரீதர் என்ற இதயவன்(வயது 39). இவரது அண்ணன் இளையராஜா(40). இருவரும் கூலித்தொழிலாளர்கள்.
இளையராஜா தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ஒரத்தநாடு அருகே உள்ள வன்னிப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு சொந்தமான தென்னந்தோப்பில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு இதயவன் தனது அண்ணன் இளையராஜாவை சந்திக்க அவர் தங்கியிருந்த வன்னிப்பட்டு கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றார். அப்போது அண்ணன்-தம்பி இருவரும் குடும்ப பிரச்சினை தொடர்பாக பேசினர். இதில் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அடித்துக்கொலை
அப்போது ஆத்திரம் அடைந்த இளையராஜா, ஆயில் என்ஜின் மோட்டாரை இயக்குவதற்கு பயன்படுத்தும் இரும்பினால் ஆன சாவியை பயன்படுத்தி இதயவனை சரமாரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த இதயவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார், இதயவன் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.