காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி உடல் மீட்பு
பண்ணவாடி பரிசல் துறையில் காவிரி ஆற்றில் மூழ்கிய தொழிலாளி மீட்கப்பட்டார்.
மேட்டூர்
ஈரோடு பழைய பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா, வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த வாரம் பண்ணவாடி கிராமத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்்கு கோவில் திருவிழாவுக்காக வந்திருந்தார். நேற்று முன்தினம் திருவிழா முடிந்து இவர் நண்பர்களுடன் பண்ணவாடி பரிசல் துறையில் குளிக்கச் சென்றார். அவர் நீண்ட நேரம் ஆகியும் கரைக்கு திரும்பவில்லை. இதனால் அவருடன் குளிக்க சென்ற நண்பர்கள் மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றில் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. இந்த நிலையில் மீனவர்கள் உதவியுடன் ராஜாவை தேடும் பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. நீண்ட நேரத்திற்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. இது குறித்து கொளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.