"பருவமழை காலங்களில் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள்"

பருவமழை காலங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் அறிவுரை கூறினார்.

Update: 2023-10-10 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் தாலுகாவில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி தலைமை தாங்கினார். தாசில்தார் வேல்முருகன் முன்னிலை வகித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோலியனூர் ராஜவேல், காணை சீனிவாசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன், காணை வட்டார மருத்துவ அலுவலர் வாசுகி, மின்வாரியத்துறை உதவி செயற்பொறியாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி பேசியதாவது:-

பருவமழை காலங்களில் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் அறிவுரை கூறினார்.

விழுப்புரம் தாலுகாவில் பேரிடர் காலங்களின்போது பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் காவல்துறை, தீயணைப்புத்துறை, பேரிடர் மீட்புப்படை, ஊர்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகிய பிரிவினர் ஒருங்கிணைந்து தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் உடைப்புகள் மற்றும் பழுதுகள் உள்ளனவா என்பதை ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டறிந்து அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுபவர்களை தங்க வைக்க தேவையான பொது இடங்கள், சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பருவமழை காலங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றி மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்