விபத்தில் பணி மேற்பார்வையாளர் சாவு
விபத்தில் பணி மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவோத்தூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் சேரன் (வயது 56). இவர், வெம்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி நளினி. இவர்களுக்கு சிவபிரசாத் என்ற மகனும், சிவப்பிரியா என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் சேரன் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
காஞ்சீபுரம் சாலையில் உள்ள பல்லி கிராமம் ஏரிக்கரை அருகே வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே சேரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.