செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு

சென்னையில் நடந்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டார்.;

Update: 2022-08-16 21:55 GMT

சென்னை,

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கோவை, மதுரை, நெல்லை மற்றும் தஞ்சை மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

சிலைகள், அரங்கங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் பல்வேறு பணிகள் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. முதல்-அமைச்சரின் ஒப்புதலோடு செய்தி மக்கள் தொடர்பு துறையின் 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டு மானிய கோரிக்கைகளின் அறிவிப்புகளில் நிலுவையில் உள்ளவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, சிலைகள் வைப்பதற்கும், அரங்கங்கள் கட்டுவதற்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

100 சதவீதம்

முதல்-அமைச்சரும், தலைமைச்செயலாளரும் அறிவிப்புகள் தொடர்பாக அவ்வப்போது ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அறிவிப்புகளின் முன்னேற்ற நிலையை அறிந்தும், நிலுவையில் உள்ளவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியும் வருகிறார்கள்.

ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை 100 சதவீதம் நிறைவேற்றினால்தான் அடுத்த மானிய கோரிக்கையின்போது கூடுதலாக புதிய அறிவிப்புகள் வெளியிடுவதற்கு ஒப்புதல் கிடைக்கும். எனவே முழு ஈடுபாட்டுடன் திட்டமிட்டு பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனர் ஜெயசீலன், கூடுதல் இயக்குனர் (செய்தி) சிவ சு.சரவணன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) அன்புச்சோழன், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்