45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் வாழ்ந்து வரும் அதிசய மனிதர்

பொன்னமராவதி அருகே கடந்த 45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் 80 வயது முதியவர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். மேலும் தந்தையை கவனிப்பதற்காக அவரது மகள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

Update: 2022-06-17 18:45 GMT

முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் தொட்டியம்பட்டி ஊராட்சி கட்டையாண்டிபட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஊரின் மையப்பகுதியில் கோவில் வீடு அருகே வசித்து வருபவர் நல்லு (வயது 80). இவர் அழகி என்பவரை தனது 19 வயதில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நல்லான் (50), முருகன் (35), அடைக்கலம் (33) ஆகிய 3 மகன்களும், பெரியநாச்சி (48), மீனாட்சி (41), அடக்கி (31) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். மேலும், இவருடைய மற்றொரு மகள் சின்னகருப்பி என்பவர் சிறுவயதிலேயே இறந்து விட்டார். மகன்கள் 3 பேரும் கொத்தனாராக பணியாற்றி வருகிறார்கள். இதில், மீனாட்சியை தவிர மற்ற அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

உணவின்றி வாழ்க்கை

வேகுப்பட்டியில் உள்ள ஒரு நகரத்தாரின் இல்லத்தில் நல்லு கடந்த 50 ஆண்டுகளாக காவலாளியாக பணியாற்றி வந்தார். தற்போது வயது முதிர்வின் காரணமாக கடந்த 9 மாதங்களாக தனது மகன்கள், மகள்கள் மற்றும் 8 பேரக்குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

கடவுள் மீது அதீத பக்தி கொண்ட நல்லு கடந்த 45 ஆண்டுகளாக உணவு சாப்பிடாமல் பால், டீ, குளுக்கோஸ், சத்துமாத்திரைகள் உள்ளிட்டவைகளை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார். இதையடுத்து, அவரது உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ என்று அஞ்சிய அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலமுறை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்து பார்த்தனர். ஆனால் அவரது உடலில் எவ்வித கோளாறும் இல்லை என்பது தெரியவந்தது.

சத்து மாத்திரை, குளுக்கோஸ்

நல்லு, வீட்டை விட்டு எங்கு சென்றாலும் குடிநீர், உணவு எதுவும் உட்கொள்ளாமல் இருக்கிறார். மேலும் அவரது மகன்கள் மற்றும் மகள்கள் வாங்கி வரும் சத்து மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் மட்டுமே சாப்பிட்டு காலம் தள்ளி வருகிறார். கிராம மக்கள் பலமுறை அவரிடம் உணவு உட்கொள்ள வலியுறுத்தியும் எதற்கும் தலை சாய்க்காமல் தற்பொழுது கட்டையாண்டிபட்டியில் உள்ள தனது வீட்டின் புளியமரத்தடியில் வசித்து வருகிறார்.

தந்தையின் இந்த நிலையை அறிந்த நல்லுவின் மகள் மீனாட்சி அவரை கவனித்து கொள்வதற்காகவும், தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் குழந்தைகளை பராமரித்து கொள்வதற்காகவும் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்