டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-31 16:06 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

டாஸ்மாக் கடை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் பஸ் நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ளது. இதனால் குடும்ப தலைவர்கள், இளைஞர்கள் மது குடித்துவிட்டு வருவதால், தினமும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள டாஸ்மாக் கடையை மூடக்கோரி திரண்டு கடை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை

அப்போது மோளையானூர் கிராமத்தில் எப்போதும் குடிமகன்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் பெண் பிள்ளைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இதனால் டாஸ்மாக் கடையை மூட வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனாலும் பெண்கள் கடையை மூடும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பெண்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்