குடிநீர் வழங்காததை கண்டித்துகாலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

Update: 2023-08-07 20:44 GMT

சேலம்

காடையாம்பட்டியில் குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

முற்றுகை

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சி தளவாய்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு மாதம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினரிடம் பொதுமக்கள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், குடிநீர் வழங்காததை கண்டித்து நேற்று அப்பகுதியை சேர்ந்த100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு மாதம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களை போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து 5 பேரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு

இதுகுறித்து நடுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் ஆழ்துளை கிணறு எதுவும் இல்லை. இதனால் முறையாக குடிநீர் வினியோகம் செய்யயப்படவில்லை. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. தினமும் சமையல் செய்வதற்கு தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் காசு கொடுத்து விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு உள்ளோம். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்