மகளிர் உரிமைத்தொகை திட்டம்:பெண்களிடம் இருந்து விண்ணப்பம் பெற 586 இடங்களில் முகாம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்களிடம் இருந்து விண்ணப்பம் பெற 586 இடங்களில் முகாம் நடந்தது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்களிடம் இருந்து விண்ணப்பம் பெற 586 இடங்களில் முகாம் நடந்தது.
டோக்கன் வினியோகம்
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் இந்த உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு கோடி பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 20-ந் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலமாக அதற்கான விண்ணப்பமும், டோக்கனும் வினியோகம் செய்யப்பட்டது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று குடும்பத்தலைவிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கினர். இந்த பணிகள் நேற்று முன்தினம் வரை நடந்தது. அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்ட நாட்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எடுத்து சென்று சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு குறைவாக உள்ள ரேஷன் கடைகள் மூலமாக விண்ணப்பங்களும், டோக்கனும் வினியோகிக்கப்பட்டன.
சிறப்பு முகாம்
இந்தநிலையில் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 639 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கான முகாம் 586 இடங்களில் நடைபெற்றது.
இந்த முகாமில் நியமிக்கப்பட்டு இருந்த தன்னார்வலர்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர். அப்போது விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? அதன் விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரிபார்த்துவிட்டு விண்ணப்பம் பெறப்பட்டது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் மொத்தம் 96 இடங்களில் முகாம் நடத்தப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரை நடக்கிறது.
2-வது கட்டமாக மீதமுள்ள 568 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்களும், டோக்கனும் இந்த மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும் முகாம் வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 544 இடங்களில் நடைபெறுகிறது.