கட்சி பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றிதகுதிவாய்ந்த அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைஅமைச்சர் பொன்முடி தகவல்

கட்சி பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி தகுதிவாய்ந்த அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

Update: 2023-07-26 18:45 GMT

அமைச்சர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் நேற்று 3-வது நாளாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்றது. இம்முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க திட்டம்

எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையில் வரலாற்று சிறப்புமிக்க திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இவ்வாண்டிற்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிற 4.8.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 3,41,209 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் 2-ம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறவுள்ளது. இதில் 2,77,236 குடும்ப அட்டைதாரர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்.

எனவே குடும்ப தலைவிகள் அனைவரும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து வருவதோடு டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்திற்கு வருகை புரிந்து விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாம்களில் மகளிர்கள் ஆர்வமுடன் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருவது மிக மகிழ்ச்சியாக உள்ளது.

கட்சி பாகுபாடின்றி

இத்திட்டத்தின் கீழ் தகுதியான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே குடும்ப தலைவிகள் எவ்வித சந்தேகமும் இல்லாமல் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன்பெறலாம். தி.மு.க. நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் எந்தவித கட்சி பாகுபாடின்றியும், சாதி, மத வேறுபாடின்றியும் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால் விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.க்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, விழுப்புரம் கோட்டாட்சியர் பிரவீனாகுமாரி, விழுப்புரம் நகரமன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி, விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்