பழத்தட்டு எடுத்து பெண்கள் ஊர்வலம்
செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பழத்தட்டு எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவடக்கு வாசல் செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர் கோவில்களில் பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல் நாள் மங்கள இசையுடன் செல்லாயி அம்மனுக்கு சாமி சாட்டுதல், பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 2-ம் நாள் வலம்புரி சக்தி விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட பொங்கல் பானை ஊர்வலமும் நடந்தது. அம்மன் கோவிலில் சக்தி பூஜை செய்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்தல் அபிஷேகம் செய்தல் நடைபெற்றது. 3-ம் நாள் கிடாய் வெட்டுதல், கருப்புசாமிக்கு அபிஷேகம் செய்தல், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தல் போன்ற உள்ளிட்ட பல ேநர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். 4-ம் நாள் வாணவேடிக்கையுடன், வர்ணக்குடைகள் பரிவார அலங்காரத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பழத்தட்டுகளை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.