பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா

கரூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது-.;

Update: 2023-06-05 18:15 GMT

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 54 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் 35 பேருக்கு ரூ.14 லட்சத்து 37 ஆயிரத்து 800 மதிப்பீட்டில் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு உலக அமைதியில் குழந்தைகளின் பங்கு என்ற தலைப்பில் நடத்தப்பட்ட "கேன்வாஸ்" ஓவியப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழ்களும், போட்டியில் பங்கு பெற்ற 18 குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

குடும்பத்துடன் தர்ணா

குளித்தலை தாலுகா, கருங்கல்பட்டி, பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:- மருதூர் தெற்கு 2 (கிராமம்) பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வருகிறேன்.

ஆய்வு செய்ய வேண்டும்

நான் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வேண்டி கடந்த 2019-ம் ஆண்டில் சட்டப்படி உரிய அலுவலர் குளித்தலை வட்டாட்சியர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர் ஆகிய அலுவலர்களுக்கு முறைப்படி பட்டா வேண்டி மனு அளித்தும் அந்த மனுவிற்கு உரிய சரியான காரணத்தை சொல்லாமல் தட்டி கழிக்கிறார்கள்.

இதுநாள் வரை பட்டா வழங்கவில்லை. தமிழ்நாடு தகவல் ஆணையர் வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து குளித்தலை வட்டாட்சியர் அவர்களிடம் அதே இடத்தில் பட்டாவும், பாதையும் வழங்க வேண்டி உத்தரவு வழங்கியுள்ளார். எனக்கு பட்டா வழங்கவில்லை. ஆகையால் பட்டா வழங்கும் வரை போராட்டம் நடத்த உள்ளேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தீக்குளிக்க முயற்சி

கடவூர் வட்டம், மாவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நல்லசிவம். இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் மனு அளிக்க வந்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து தன்மீதும், குடும்பத்தினர் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை தடுத்து அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்து விசாரித்தனர்.

இதில் ஒருவரிடம் விவசாய நிலத்தின் மீது கடன் வாங்கியதாகவும், இக்கடனுக்கு மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்ததாகவும், இந்நிலையில் அந்த நிலத்தை விற்க முயற்சி நடக்கிறது என்றும் எனவே நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க கோரி இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முறையாக சிமெண்டு கலவை...

கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ஆனந்தராஜ் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- க.பரமத்தி ஒன்றியம், கேட்டையார்பாளையம் அருந்ததியர் தெருவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. ஆனால் சிமெண்டு, கம்பிகள் எதுவும் பயன்படுத்தாமல் எம்.சாண்ட், ஜல்லி மட்டுமே பயன்படுத்தி பணிகள் செய்யப்படுகிறது.

தற்காலிகமாக நேற்று பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே முறையாக சிமெண்டு கலவை மற்றும் கம்பிகள் பயன்படுத்தி கழிவுநீர் கால்வாய் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்