பருப்பு கம்பெனியில் ரூ.2½ கோடி சுருட்டிய பெண் ஊழியர்கள் அதிரடி கைது
சென்னையில் பருப்பு கம்பெனியில் ரூ.2½ கோடி சுருட்டிய 2 பெண் ஊழியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். வழக்கில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஊழியரும் மாட்டினார்.
சென்னை,
சென்னை திருவொற்றியூர், டோல்கேட் பகுதியில் ராஜேஷ் பிரதர்ஸ் என்ற பெயரில் பருப்பு கம்பெனி ஒன்று செயல்படுகிறது. அந்த கம்பெனியில் கடந்த 10 வருடங்களாக கணக்கு பார்த்து வந்த சரண்யா (வயது 32), பிரதீபா (36) மற்றும் திவ்யா ஆகிய 3 பெண் ஊழியர்களும் சேர்ந்து கம்பெனி பணத்தை கையாடல் செய்து விட்டனர். ரூ.2½ கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி விட்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஆவண மோசடி தடுப்பு பிரிவிற்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி, துணை கமிஷனர் மீனா, உதவி கமிஷனர் ராஜசேகரன் ஆகியோர் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பெண் ஊழியர்கள் கைது
விசாரணையில் ரூ.2½ கோடி சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பேரில் ஊழியர்கள் சரண்யா, பிரதீபா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். திவ்யா நிறைமாத கர்ப்பமாக இருப்பதால், அவரை கைது செய்யவில்லை. ஆனால் அவர் மீது வழக்கு உள்ளது. மேற்கண்ட 3 பேரின் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினார்கள். சோதனையில் ரூ.27½ லட்சம் ரொக்கப்பணம், 197 பவுன் தங்க நகைகள், ரூ.67 லட்சம் வங்கி வைப்புத்தொகை, ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்கள், 6 செல்பொன்கள் போன்றவை கைப்பற்றப்பட்டு மீட்கப்பட்டது.