வேப்ப முத்துக்களை ஆர்வமுடன் சேகரிக்கும் பெண்கள்
வேப்ப முத்துக்களை ஆர்வமுடன் சேகரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
நாட்டில் பல தொழில்கள் இருந்தாலும் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்தான். விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களுமே மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் விவசாயிகள் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தனர். நாளடைவில் ரசாயன உரங்களின் வருகையை தொடர்ந்து இயற்கை உரங்களை பயன்படுத்துவது குறைந்துவிட்டது.
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் பல கிராமங்களில் இயற்கை உரத்தை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். ராமநாதபுரம், முதுகுளத்தூர், சாயல்குடி, கடலாடி, ராமேசுவரம், மண்டபம் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேப்பமுத்துக்களை பெண் விவசாயிகள் ஆர்வமுடன் சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் வேப்பமுத்துக்களை அந்தந்த ஊர்களில் உள்ள கடைகளில் கொடுத்தும் ஒரு கிலோ ரூ.100 என வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் அதை உரமாக பயன்படுத்துவதற்கும் சேமித்து வருகின்றனர்.
இது குறித்து கமுதி அருகே வழிமரிச்சான் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி பெத்தனாட்சி கூறியதாவது, ஆண்டு தோறும் ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வேப்பமுத்து சீசன் ஆகும். இதனை சேகரிப்பதற்காக கமுதியில் இருந்து ஆட்டோ வாடகைக்கு எடுத்து பெண்கள் குழுவாக சேர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் என பல ஊர்களிலும் கீழே விழுந்து கிடக்கும் வேப்ப முத்துக்களை சேகரிப்போம். பின்னர் வெயிலில் நன்கு காயவைத்து அதை சரி பாதியாக பிரித்து கொள்வோம்.
விவசாய பணிகள் தொடங்கிய பின்னர் நெல், மிளகாய், பருத்தி போன்ற விவசாயத்திற்கு வேப்ப முத்துக்களை இயற்கை உரமாக பயன்படுத்துவோம். அதற்காகத்தான் வேப்பமுத்துக்களை சேகரித்து வருகின்றோம். விவசாயத்திற்கு வேப்ப முத்துக்களை இயற்கை உரமாக பயன்படுத்தும் பட்சத்தில் நல்ல விளைச்சலும் இருக்கும். பூச்சி தாக்குதலும் இருக்காது என்றார்.