ஆவடி அருகே 2 வீடுகளில் பெண்களை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை
ஆவடி அருகே 2 வீடுகளுக்குள் புகுந்து தனியாக இருந்த பெண்களை கத்திமுனையில் மிரட்டி நகை, பணம், செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.;
ஆவடியை அடுத்த பட்டாபிராம் நெமிலிச்சேரி ராஜீவ் நகரை சேர்ந்தவர் சந்திரலேகா (வயது 58). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், வீட்டின் கிரில்கேட் மற்றும் மரக்கதவை பூட்டிவிட்டு படுத்து தூங்கினார்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 கொள்ளையர்கள், சந்திரலேகா வீட்டின் கிரில் கேட்டின் பூட்டை உடைத்தும், பின்னர் மரக்கதவை பலமாக தட்டி உடைத்தும் வீட்டுக்குள் புகுந்தனர்.
பின்னர் சந்திரலேகாவிடம் கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம், ஒரு செல்போன் மற்றும் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இதுகுறித்து சந்திரலேகா அளித்த புகாரின்பேரில் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அதேபோல் ஆவடியை அடுத்த திருநின்றவூர் வேணு மாதவன் நகரை சேர்ந்தவர் ஆண்டாள் (62). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மற்றொரு வாசல் வழியாக வீட்டுக்குள் சென்று படுத்து தூங்கினார்.
அப்போது நள்ளிரவு 1.30 மணி அளவில் அங்கு வந்த கொள்ளையர்கள் 3 பேர், கதவு பூட்டி இருப்பதாக நினைத்து ஆண்டாள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஆண்டாள் படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட 3 பேரும் மூதாட்டி ஆண்டாளிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 கிராம் மதிப்புள்ள வளையல் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.