கோவையில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். நவீன தொழில் நுட்பம் மூலம் 1 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-11-09 18:45 GMT

கோவை

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். நவீன தொழில் நுட்பம் மூலம் 1 லட்சம் பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்படி கோவையில் 14 லட்சத்து 82 ஆயிரத்து 79 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 32 ஆயிரத்து 354 பெண் வாக்காளர்கள், 3-ம் பாலினத்தவர்கள் 539 பேர் என மொத்தம் 30 லட்சத்து 14 ஆயிரத்து 972 வாக்காளர்கள் உள்ளனர்.

பெயர் நீக்கம்

கோவை மாவட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்த 15 ஆயிரத்து 600 இறந்து போன வாக்காளர்கள், 32 ஆயிரத்து 733 இடம் பெயர்ந்த வாக்காளர்கள், ஒரே நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் உள்ள 1 லட்சம் வாக்காளர் என மொத்தம் 1 லட்சத்து 48 ஆயிரத்து 333 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 1.10.23 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம்.

மேலும் வரைவு வாக்காளர் பட்டியிலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு வருகிற 8.12.22 வரை அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். இதுதவிர வருகிற 12.11.22., 13.11.22 மற்றும் 26.11.22., 27.11.22 ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்கள் உரிய படிவங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

செயலி

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ம், பதிவினை நீக்க படிவம் 7-ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8-ம் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய www.nvsp.in எனும் இணைய தளம் மூலமாகவோ அல்லது www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் வோட்டர்ஸ் செயலியை பயன்படுத்தி திருத்தம் மற்றும் பெயர் சேர்க்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5.1.23 அன்று வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் சவுமியா ஆனந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவக்குமார்,கோவை ஆர்.டி.ஓ. (தெற்கு) பண்டரிநாதன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பெண் வாக்காளர்கள் அதிகம்

கோவை மாவட்டத்தில் 14 லட்சத்து 82 ஆயிரத்து 79 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 32 ஆயிரத்து 354 பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 50 ஆயிரத்து 275 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். மாவட்டத்தின் பெரிய தொகுதியாக கவுண்டம்பாளையம் உள்ளது. இங்கு 4 லட்சத்து 53 ஆயிரத்து 269 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் குறைந்த தொகுதியாக வால்பாறை உள்ளது. இங்கு 1 லட்சத்து 97 ஆயிரத்து 537 வாக்காளர்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்