உறுதியற்ற சுகாதார வளாகத்தை பயன்படுத்தும் பெண்கள்

காகிதப்பட்டறையில் உறுதியற்ற சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2023-08-18 18:39 GMT

சுகாதார வளாகம்

வேலூர் காகிதப்பட்டறை முனிசிபல் காலனி உள்ளது. இங்கு துப்புரவு பணியாளர்கள், கூலித்தொழிலாளர்கள் என ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் அங்குள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர். இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் உறுதி இன்றி காணப்படுகிறது. சுவர்கள் சேதமடைந்தும், சிலாப்புகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும் காணப்படுகிறது.

ஆண்கள், பெண்கள் என தனித்தனியே உள்ள சுகாதார வளாகத்தை தற்போது பெண்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அங்கு தண்ணீர் பிரச்சினையும் உள்ளதால் அவர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

பொதுமக்களின் நலனுக்காக இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது. நாளடைவில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஆண்கள் கழிவறைக்காக வேறு இடம் தேடிச்செல்லும் நிலை உள்ளது. சில பெண்கள் மட்டும் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் பிரச்சினை உள்ளதால் தெருவில் உள்ள குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து கழிவறைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. கதவுகளும் உடைந்து காணப்படுகிறது. சில கதவுகள் உடைந்து விட்டதால் துணியை வைத்து கட்டி மறைத்துள்ளோம். செப்டிக் டேங்க் சுவர் இடிந்துள்ளதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

புதிய சுகாதார வளாகம் கட்ட வேண்டும்

சுகாதார வளாகம் இடியும் அபாய நிலையில் உள்ளது. பல வீடுகளில் கழிவறை வசதி இல்லாததால் வேறுவழியின்றி பெண்கள் அதை பயன்படுத்தி வருகின்றனர். உறுதியற்ற நிலையில் சேதமடைந்து கிடக்கும் சுகாதார வளாகத்தை இடித்து விட்டு புதிய சுகாதார வளாகம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்