காரணம் அறிய உதவி மையங்களில் 2-வது நாளாக குவிந்த பெண்கள்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்காத பெண்கள் காரணத்தை தெரிந்துக் கொள்ள உதவி மையங்களில் 2-வது நாளாக குவிந்தனர்.

Update: 2023-09-20 18:45 GMT

நாகர்கோவில்:

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்காத பெண்கள் காரணத்தை தெரிந்துக் கொள்ள உதவி மையங்களில் 2-வது நாளாக குவிந்தனர்.

மகளிர் உரிமைத்தொகை

குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 75 சதவீதம் பேர் பணம் கிடைக்க தகுதியானவர்கள் என தெரியவந்துள்ளது. அந்த நபர்களுக்கு வங்கியில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ளவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிராகரிப்பு குறித்து இதுவரை செல்போனில் எந்தவொரு குறுஞ்செய்தியும் வரவில்லை. இதனால் தகுதியான பல பெண்கள் பணம் கிடைக்கவில்லை என தெரிவித்தனர்.

இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் கிடைக்காதவர்கள் உதவி மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்காக குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் திருவட்டார் ஆகிய 6 தாலுகா அலுவலகங்கள் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகம் என மொத்தம் 9 இடங்களில் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

பெண்கள் குவிந்தனர்

உதவி மையங்களில் 5 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் விண்ணப்பித்து பணம் கிடைக்காத பெண்கள் நேற்று முன்தினம் உதவி மையங்களில் குவிந்தனர். ஆனால் சர்வர் செயல்படாததால் பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலக உதவி மையத்தில் 2-வது நாளாக நேற்று காலையிலேயே ஏராளமான பெண்கள் குவிந்தனர். அங்குள்ள பணியாளர்களிடம் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை கேட்டனர். பின்னர் ஆன்லைன் மூலமாக ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டை சரி பார்த்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு உதவி மைய ஊழியர்கள் தெரிவித்தனர். சிலருக்கு வங்கி கணக்கு குளறுபடி, வருமான வரி பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே போல தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி மையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்