தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்
தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராயபுரத்தில் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை தண்டையார்பேட்டை கப்பல்போலு தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த சில மாதங்களாக மூடப்படாமல் கிடக்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் கழிவுநீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
பெண்கள் சாலை மறியல்
இந்த நிலையில் தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ராயபுரம் ஜி.ஏ.ரோடு-எம்.சி ரோடு சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ராயபுரம் எம்.எல்.ஏ. ஐட்ரீம்ஸ் மூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.