சமூகவலைதளத்தில் பெண்கள் புகைப்படம் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்

சமூகவலைதளத்தில் பெண்கள் புகைப்படம் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்

Update: 2022-08-23 11:53 GMT

பெண்கள் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது, தற்போதைய சூழ்நிலையில் அனைவரும் செல்போனை அதிகம் உபயோகப்படுத்துகின்றனர். செல்போன் மூலமாக நமக்கு தேவையான அனைத்தும் இருந்த இடத்திலேயே பெறும் வசதிகள் வந்துவிட்டது. இதனால் ஏற்படும் சைபர் குற்றங்களில் இருந்து எப்படி நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு கண்டிப்பாக உங்களிடம் இருக்க வேண்டும். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கே தாங்கள் பாதிக்கபட்டிருக்கிறோம் என்று தாமாதமாகத்தான் தெரியவருகிறது. ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்று வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.

தவிர்க்க..

மேலும் போலீஸ் உயர் அதிகாரிகள் போன்றும், தங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் போன்றும் தொடர்பு கொண்டு பரிசு கூப்பன் விழுந்துள்ளதாக கூறி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற வேண்டாம், செல்போன்களை நமது தேவைக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டுமே தவிர அதற்கு அடிமையாகி விடக்கூடாது. அதே போன்று சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதில் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்கோ அழைப்புகளுக்கோ பதில் அளிக்க வேண்டாம். உங்களது ஏ.டி.எம் கார்டு எண்களை கேட்டு வரும் தொலைபேசிகளுக்கு பதில் அளிக்க வேண்டாம் உங்களது குறிக்கோள் கல்வியாக மட்டுமே இருக்கவேண்டும். நன்கு படித்து சமூகத்தில் சாதனையாளர்களாக திகழ வேண்டும். செல்போன்கள் நமது சந்தோசத்துக்கு மட்டுமே இருக்கவேண்டும், குற்றங்களில் ஈடுபடுவதற்கு அல்ல. பெண்கள் தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களையோ அல்லது சுய விவரங்களையோ பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். உங்களது எண்ணங்கள் நல்ல சிந்தனைகளை நோக்கியே இருக்க வேண்டும். ஆகவே செல்போன்களை பயன்படுத்தும்போது மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், புனித மரியன்னை மகளிர் கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், கல்லூரி சுயநிதி பிரிவு செயலர் ஜெயராணி மற்றும் போலீசார், கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்