சாலையோரத்தில் பனங்கிழங்குகளை விற்கும் பெண்கள்

பொங்கல் பண்டிகைையயொட்டி சாலையோரத்தில் பனங்கிழங்குகளை பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் இல்லாததால் விலை அதிகரித்து உள்ளது.

Update: 2023-01-12 18:29 GMT

பொங்கல் பண்டிகைையயொட்டி சாலையோரத்தில் பனங்கிழங்குகளை பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் இல்லாததால் விலை அதிகரித்து உள்ளது.

பனங்கிழங்கு

தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.பொங்கல் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு மற்றும் பனங்கிழங்கு தான். தமிழர்களின் உணவு பண்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது பனையும் பனை சார்ந்த பொருட்களும் தான். அதில் பதநீர், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனங்கிழங்கு என சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

அதுபோல் பனங்கிழங்கில் அதிக மருத்துவ குணம் உள்ளதுடன் நார்ச்சத்தும் அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்குகளை விரும்பி சாப்பிடுவார்கள். தலைப் பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கும் பெண் வீட்டார் சார்பில் சீதன பொருட்களுடன் சேர்த்து பனங்கிழங்கும் இன்று வரை வழங்கப்பட்டு வருவது பாரம்பரியமாக இருந்து வருகின்றது. ஆண்டுதோறும் நவம்பர் மாத இறுதியில் இருந்து பனங்கிழங்கு சீசன் தொடங்கி மார்ச் மாதம் வரை இருக்கும்.

சாலையோரம் விற்பனை

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலும் பனங்கிழங்கு விற்பனை களை கட்ட தொடங்கி விட்டது. இதே போல் ராமநாதபுரத்திலும் அரண்மனை சாலை, சிவில் ராஜ வீதி, வண்டிக்கார தெரு, ரோமன் சர்ச் சாலை, பஸ் நிறுத்த நுழைவுப் பகுதி, பாரதி நகர், சந்தை தெரு என பல இடங்களிலும் ஏராளமான பெண்கள் பனங்கிழங்கு கட்டுக்களுடன் விற்பனைக்காக வைத்து உள்ளனர். இந்த ஆண்டு மழை இல்லாததால் பனங்கிழங்கு விளைச்சல் குறைவு. இதனால் பனங்கிழங்கு விலை அதிகரித்து உள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பனங்கிழங்கு விற்பனை செய்து வரும் வடக்கு தெருவை சேர்ந்த பெண் ரஞ்சிதா கூறியதாவது:-

விலை அதிகரிப்பு

கடந்தாண்டைவிட இந்த ஆண்டு பனங்கிழங்கு விளைச்சல் குறைவுதான். ஆனால் இந்த ஆண்டு பனங்கிழங்கு விலையும் அதிகம். கடந்தாண்டு 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டதால் பனங்கிழங்கு விற்பனையும் அந்த அளவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் உள்ளதால் இனியாவது பனங்கிழங்கு விற்பனை சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்