ராமநாதபுரத்தில் பயங்கரம்: வீட்டோடு தீ வைத்து கொளுத்தி மூதாட்டி கொடூரக்கொலை

வீட்டுக்கு தீ வைத்து 95 வயது மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டார். தீ வைத்தவர் வீடும் பற்றி எரிந்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-01 02:50 GMT

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அழகமடை கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது 71). அதே கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு (70). இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களது வீடுகள் அருகருகே உள்ளன. இவர்களுக்குள் நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்தது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சித்திரவேலு, ராசுவை பழிவாங்க திட்டமிட்டார். சித்திரவேலுவை தவிர அவருடைய குடும்பத்தினர் கோவையில் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ராசு, அவருடைய மனைவி மங்கையர்கரசி இருவரும் வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தனர். ராசுவின் தாயார் பாப்பு அம்மாள்(95) வீட்டு திண்ணையில் வெளியே கட்டிலில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த சித்திரவேலு, ராசுவின் வீட்டின் முன்பக்க கதவை சேர்த்து இரும்பு கம்பியால் கட்டி, கதவை திறக்க முடியாமல் செய்தார்.

பின்னர் கதவில் இருந்து வெளியே வரை விறகுகளை வரிசையாக அடுக்கி மண்எண்ணெயை ஊற்றினார். பாப்பு அம்மாள் தூங்கிக்கொண்டிருந்த கட்டில் பகுதியிலும் மண்எண்ணெயை ஊற்றினார். அயர்ந்து தூங்கியதால் பாப்பு அம்மாளால் இதை கவனிக்க முடியவில்லை.

இதே போல் வீட்டின் பின்பக்க கதவையொட்டியும் விறகுகளை அடுக்கி அதிலும் மண்எண்ணெயை ஊற்றியுள்ளார். பின்னர் மண்எண்ணெய் ஊற்றிய அனைத்து பகுதிகளிலும் தீப்பந்தம் மூலம் சித்திரவேலு தீ வைத்துள்ளார்.

சற்று நேரத்தில் தீ மளமளவென எரிந்தது. கட்டிலில் படுத்திருந்த பாப்பு அம்மாள் மீதும் தீப்பிடித்தது. அவர் அலறினார்.

இந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் படுத்திருந்த அவருடைய மகன் ராசு, மருமகள் மங்கையர்க்கரசி ஆகியோர் எழுந்து முன்பக்க கதவை திறக்க முயன்றனர். ஆனால் இரும்பு கம்பியால் கதவு கட்டப்பட்டிருந்ததால் அவர்களால் திறக்க முடியவில்லை. இதையடுத்து பின்பக்க கதவை உடைத்தனர். அந்த வாசலில் தீ எரிந்து கொண்டிருந்தாலும், எப்படியோ தப்பி வெளியே ஓடிவந்துவிட்டனர்.

அப்போது சித்திரவேலு தனது கையில் வைத்திருந்த தீப்பந்தத்தை ராசு, மங்கையர்க்கரசி மீது வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் அவர்கள் லேசான தீக்காயம் அடைந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தனர்.

அந்த நேரம் தீ பரவி, சம்பவத்துக்கு காரணமான சித்திரவேலுவின் வீட்டிலும் தீப்பற்றி எரிந்தது. உடனே மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

திடீரென சித்திரவேலு வீட்டில் இருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதுகுறித்து கிராம மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து இரு வீடுகளிலும் தீயை அணைத்தனர். இதற்கிடையே பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த பாப்பு அம்மாள் மீட்கப்பட்டார். அவர் திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாப்பு அம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சித்திரவேலுவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்