தர்மபுரி:
தர்மபுரியில் அடுப்பில் வெந்நீர் வைத்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண் பலி
தர்மபுரி ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அருகே உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் சூசைராஜ். இவருடைய மனைவி புஷ்பராணி (வயது 52). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் புஷ்பராணி வீட்டில் உடலில் தீக்காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
அவருக்கு உணவு கொண்டு சென்ற அவருடைய மகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது வெந்நீர் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக புஷ்பராணி அணிந்திருந்த சேலையில் தீப்பிடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் புஷ்பராணியை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.
விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று புஷ்பராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெந்நீர் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது, சேலையில் தீப்பிடித்து பெண் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.