கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
தர்ணா
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முன்னாள் நகரசபை கவுன்சிலர் சுப்புலட்சுமி தலைமையில் பெண்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா நம்பிபுரம் கிராமத்தில் கண்மாய் நீர்தேங்கும் பகுதியில் 187 ஹெக்டேர் ஆயக்கட்டு பரப்பு 299-15.0. ஹெக்டேர் உள்ளது. அதில் 6 மடைகள், 6 ஷட்டர்கள் உள்ளன. இவை அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் போதுமான வாறுகால் வசதிகளும் இல்லை. அதுமட்டுமின்றி இருக்கக்கூடிய வாறுகாலையும் தூர்வாரவில்லை என்பதால் வாறுகால்கள் இருக்கும் இடம் தெரியாத நிலை உள்ளது.
தூர்வார வேண்டும்
இந்த நீர்ப்பாசனத்தை கீழநம்பிபுரம், நம்பிபுரம், பொன்னையாபுரம், கோட்டூர், வேடப்பட்டி, முதலிப்பட்டி, வடமலாபுரம், கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நம்பியுள்ளனர்.
கண்மாய் மற்றும் மடைகளை பராமரிப்பு செய்ய வலியுறுத்தி அரசு அலுவலங்களில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எவ்வித பணிகளும் செய்யப் படாமல் கடந்த காலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மூலம் அனைத்தும் செய்யப்பட்டதாக தவறான தகவல் கொடுத்தது மட்டுமின்றி, அதற்கான பில்லும் எடுத்துள்ளனர்.
எனவே இந்த முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாயின் கரையை உயர்த்தி, வாறுகால்களை தூர்வார வேண்டும், பழுதடைந்துள்ள ஷட்டர்களை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.