குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
வேளாங்கண்ணி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி,:
வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் சின்னத்தும்பூர் ஊராட்சியில் 1,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வராததால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குடிநீர் வழங்கக்கோரி சின்னதும்பூரில் நாகை-மேப்பிடாகை சாலையில் பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் நாகை- மேலப்பிடாகை சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது