நெய்வேலியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

நெய்வேலியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2022-07-14 22:47 IST

நெய்வேலி,

நெய்வேலி அருகே கொல்லிருப்பு காலனி பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு என்.எல்.சி. பழைய கரிகட்டி ஆலை பகுதியில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 நாட்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் நெய்வேலி என்.எல்.சி. புதிய சேவை பகுதி நுழைவு வாயில் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த என்.எல்.சி.துணை பொது மேலாளர் முனியராஜ் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குழாயில் உடைப்பு

அப்போது பெண்கள் தங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க வேண்டும் என்றனர். அதற்கு அதிகாரிகள் கூறுகையில், குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது வரை லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் என்றனர். அதனை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்