துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
ஆம்பூரை அடுத்த உமராபாத் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ராதிகா (வயது 45). இவரது அண்ணன் சந்திரசேகர். சில ஆண்டுகளுக்கு முன்பு ராதிகா தனது 30 பவுன் நகையை அண்ணன் சந்திரசேகரனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. வாங்கிய நகையை நீண்ட நாட்களாக சந்திரசேகர் திருப்பித்தர வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதிகா உமராபாத் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ராதிகா தனது உடளில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, ராதிகா மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ராதிகாவிடம் விசாரணை நடத்தினார். அப்போது இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.