கலெக்டர் அலுவலகத்தில்பெண் தீக்குளிக்க முயற்சி

நெல் விற்றதால் கணவருக்கு கிடைக்க வேண்டிய ரூ.18 லட்சத்தை வாங்கி தரக் கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

Update: 2022-08-22 20:20 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பருத்தியப்பர் கோவிலை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சசிகலா. இவர் நேற்று தனது கிராமத்தை சேர்ந்த சிலருடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென சசிகலா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து அவரிடம் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

பின்னர் சசிகலாவிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

ரூ.18 லட்சம்

நான் எனது 2 மகன்களுடன் வசித்து வருகிறேன். என் கணவர் கடந்த 2017-ம் ஆண்டு செங்கிப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் நெல் வியாபாரம் செய்து வந்தார். விவசாயிகளிடம் நெல்லை வாங்கி வந்து அந்த நபரிடம் விற்று வந்தார். அந்த நபரிடம் இருந்து வர வேண்டிய ரூ.18 லட்சம் இன்றுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. என் கணவர் பல வழிகளில் முயற்சி செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை.

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கூட செயற்கை சுவாசத்துடன் வந்து மனு அளித்தார். கடந்த மாதம் எனது கணவர் இறந்து விட்டார். அதன்பிறகு கடன் தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். நானும், என் மகன்களும் கூலி வேலைக்கு சென்று வருகிறோம். கடன் தொல்லை தாங்க முடியாமல் பணத்தை மீட்டு தர வேண்டும் என முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தோம். போலீசாரிடமும் மனு அளித்தோம்.

இறுதி முடிவு

ஆனால் எந்த பலனும் இல்லை. எனது குடும்பம் மிகுந்த கடன் தொல்லையால் அவதிப்படுவதாலும், எனக்கு உதவி செய்ய யாரும் முன்வராததாலும் இந்த இக்கட்டான இறுதி முடிவை எடுக்க முயற்சி செய்தேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


Tags:    

மேலும் செய்திகள்