பள்ளிப்பட்டு அருகே 2-வது கணவரின் வீட்டு முன் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

2-வது கணவரின் வீட்டு முன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளம்பெண் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-09-06 09:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை காஞ்சீபுரம் தெருவில் வசித்து வந்தவர் ரவி. இவரது மகள் துளசி (வயது 28). இவர் சில வருடங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூமிகா (வயது 10) என்ற மகளும், ஜெகன் (7) என்ற மகனும் உள்ளனர். கணவர் குப்பன் தினமும் மது குடித்துவிட்டு வந்து இவரை சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த துளசி 5½ ஆண்டுகளுக்கு முன் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு துளசி சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அதே கம்பெனியில் பள்ளிப்பட்டு அருகே புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்த முகேஷ் (28) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனால் முகேஷ் துளசி திருமணத்தை அவர்களது நண்பர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சிவன் கோவிலில் நடத்தினார்கள். பிறகு அங்கேயே அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், தான் 2-வது திருமணம் செய்து கொண்டது தனது வீட்டுக்கு பிடிக்கவில்லை என்று கூறி முகேஷ் சில நாட்களுக்கு முன் நைசாக அங்கிருந்து நழுவினார்.

அதன்பிறகு அவரை துளசி பலமுறை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் முகேஷ் அவரிடம் பேசவில்லை. அதேபோல் முகேஷ் குடும்பத்தாரும் துளசியிடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த துளசி கடந்த மாதம் 30-ந் தேதி முகேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு முகேஷ் இல்லாததால் அவரது பெற்றோரிடம் பேச வேண்டும் என்றார். ஆனால் அவர்கள் இவரிடம் பேசாமல் தவிர்த்து விட்டனர்.

இதனால் மனமுடைந்த துளசி அங்கேயே தனது உடலில் தான் கொண்டு சென்ற பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த துளசியை சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் நள்ளிரவு துளசி பரிதாபமாக இறந்தார். அவர் இறப்பதற்கு முன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தனது இந்த நிலைக்கு காரணம் தன்னை மணந்த முகேஷ், அவரது வீட்டை சேர்ந்த நரேஷ், சிட்டி ஆகியோர் மட்டுமே என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார் என போலீசார் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக உள்ள அவர்கள் 3 பேரையும் தேடி வருகின்றனர்.

இறந்த துளசியின் குழந்தைகளில் பூமிகா தாயிடமும், மகன் ஜெகன் முதல் கணவர் குப்பனிடமும் வளர்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்