பெண்ணிடம் 8½ பவுன் நகை, செல்போன் திருட்டு

சின்னசேலம் அருகே சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண்ணிடம் 8½ பவுன் நகை மற்றும் செல்போனை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-01 18:45 GMT

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதுடைய இளம்பெண். இவருக்கு, முகநூலில் வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. தாமோதரன் என்கிற ரவிக்குமார் என்ற பெயரில் அறிமுகமான அந்த நபர், தான் சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறேன். நீங்கள் சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என கூறியுள்ளார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த பெண், சினிமாவில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் விதவிதமான ஆடையில் உங்களை போட்டோ எடுக்க வேண்டும். அதனை நான் இயக்குனர்களிடம் காண்பித்து சினிமாவில் நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன். மேலும் எனக்கு போட்டோவும், எடுக்க தெரியும் என்று கூறியுள்ளார்.

போட்டோ எடுக்க...

இதனை நம்பிய அந்த பெண், தன்னை போட்டோ எடுக்க வீட்டுக்கு வருமாறு அந்த நபரை அழைத்துள்ளார். அதன்படி பெண்ணின் வீட்டுக்கு அந்த நபர் வந்துள்ளார். இதையடுத்து அவர் அந்த பெண்ணிடம், போட்டோ எடுக்க நல்ல ஆடை இருந்தால் அணிந்து வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் ஆடை அணிந்து வர வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

திருட்டு

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த நபர், வீட்டில் இருந்த 8½ பவுன் நகை மற்றும் செல்போனை நைசாக திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இதனிடையே அலங்காரம் செய்துவிட்டு வீட்டின் அறையில் இருந்து அந்த பெண் வெளியே வந்த போது, வீட்டில் இருந்த நபரை காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் நகை மற்றும் செல்போனையும் காணவில்லை.

அப்போது தான், தன்னை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி நகை மற்றும் செல்போனை அந்த நபர் திருடிச் சென்றது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்