பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
விராலிமலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 பவுன் சங்கிலி பறிப்பு
விராலிமலை சிதம்பரம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி யசோதா (வயது 59). இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்று வீட்டு மீண்டும் வீட்டிற்கு இன்று காலை பஸ்சில் திரும்பி வந்தார். விராலிமலை கடைவீதியில் இறங்கிய யசோதா வீட்டிற்கு செல்வதற்காக சிதம்பரம் கார்டன் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் யசோதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பித்து சென்று விட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்து யசோதா விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிதம்பரம் கார்டன் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விராலிமலையில், அண்மை காலமாக இப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருகிறது. சிதம்பரம் கார்டன் பகுதி அருகே தேசிய நெடுஞ்சாலை இருப்பதால் சமூக விரோதிகள் தப்பித்து செல்ல ஏதுவாக உள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்
இதேபோல் அவ்வப்போது போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடித்து வந்தபோதும் விராலிமலை போலீஸ் நிலையத்தில் போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்படுவதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.