பேசின் பிரிட்ஜ் நிலையத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 10 பவுன் நகையை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார்.;
சென்னை, திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வளர்மதி (வயது 43). இவர் நேற்று முன்தினம் மாலை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் மூலம் திருமுல்லைவாயலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, ரெயிலில் இருந்த நபர் ஒருவர் சீட்டில் இருந்து எழுந்து வளர்மதியின் அருகே வந்து நின்றார்.
ரெயிலானது பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை வந்தடைந்து பின்னர் கிளம்பியது. ரெயில் மெதுவான வேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வளர்மதியின் அருகே நின்றிருந்த வாலிபர், அவரின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து இறங்கி ஓடினார். இதனால், பதற்றம் அடைந்த வளர்மதி 'திருடன்...திருடன்..' என்று கத்தியவாறு அந்த நபரை பிடிக்க முயன்றார்.
ஆனால், அதற்குள் அந்த நபர் தண்டவாளம் அருகே இருந்த புதர் மேட்டில் ஏறி தப்பி சென்றார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் வளர்மதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், அந்த நபர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்தே வளர்மதியை பின்தொடர்ந்து சென்றது தெரியவந்தது. மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓடும் ரெயிலில் வாலிபர் ஒருவர் பெண்ணிடம் செயினை பறித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.