கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா

தஞ்சை அருகே கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-09-20 20:23 GMT

வல்லம்;

தஞ்சை அருகே கணவர் வீட்டு முன்பு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருமணம்

தஞ்சையை அடுத்த வல்லம் கொல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த மாரிமுத்து மகன் விஜயகுமார்(வயது 33). இவருக்கும், திருவாரூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகள் மஞ்சுளா(29) என்பவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணத்துக்கு பின்னர் மஞ்சுளா மற்றும் விஜயகுமார்ஆகிய இருவரும் வல்லத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு 10 மாத ஆண் குழந்தை மஞ்சுளா வயிற்றிலேயே இறந்து பிறந்தது.

கணவர் வீட்டு முன்பு தர்ணா

இந்த நிலையில் மஞ்சுளா கடந்த ஒரு வருடமாக திருவாரூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வல்லத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு மஞ்சுளா வந்தார்.அப்போது அவரை வீட்டிற்குள் விஜயகுமார் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் கணவர் வீட்டின் முன்பு தனது குழந்தையுடன் கடந்த 2 நாட்களாக மஞ்சுளா அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மஞ்சுளாவுடன் அவரது உறவினர்களும் இருந்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா உத்தரவின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் நேரில் சென்று மஞ்சுளாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் மஞ்சுளா மற்றும் விஜயகுமார் இருவரையும் வல்லம் அனைத்து மகளிர் போலீசார், போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்தியா விசாரணை மேற்கொண்டார்.விசாரணையில், விஜயகுமார் தற்போது நேரம் சரியில்லாததால் 3 மாதத்திற்குள் மனைவியுடன் சேர்ந்து வாழ்வதாக போலீசாரிடம் எழுதிக் கொடுத்து விட்டு சென்றார். இதனைத்தொடர்ந்து மஞ்சுளா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்