கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த பெண் சாவு

Update: 2023-06-01 19:30 GMT

சங்ககிரி:-

சங்ககிரி அருகே கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த பெண் இறந்தார். கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்காதல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா கருமாபுரம் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 44), லாரி டிரைவர் டிரைவர். இவர் சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் கிராமம் கிடையூரில் தனது மனைவி தேன்மொழியுடன்(38) வசித்து வந்தார்.

இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் ஏதும் இல்லை. தேன்மொழி பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவர் தர்மலிங்கம் (47) என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதையடுத்து அவர்களின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவரவே மனைவியை ரங்கசாமி கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தர்மலிங்கத்தின் மனைவி பவித்ரா (35), ரங்கசாமிக்கு போன் செய்தார். அப்போது அவர், உங்களின் மனைவி தேன்மொழியும், எனது கணவர் தர்மலிங்கமும் கிடையூர் கொடக்கல் திட்டு பகுதியில் விஷம் குடித்து விட்டு, வாந்தி எடுத்து மயங்கி கிடக்கின்றனர் என்று கூறினார்.

பெண் சாவு

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ரங்கசாமி மற்றும் பவித்ராவின் உறவினர்கள் சேர்ந்து ஆம்புலன்சுகள் மூலம் தர்மலிங்கத்தை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும், தேன்மொழியை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர். இதில் தேன்மொழி சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேநேரத்தில் தர்மலிங்கம் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ரங்கசாமி சங்ககிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதிர்ச்சி தகவல்கள்

இதில் கள்ளக்காதல் ஜோடியான தர்மலிங்கமும், தேன்மொழியும் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தது.

இதன் விவரம் வருமாறு:-

நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் தர்மலிங்கத்தின் வீட்டுக்கு அவருடைய கள்ளக்காதலியான தேன்மொழி வந்துள்ளார். அங்கு அவர் படுக்கை அறையில் இருந்தபடி பவித்ராவின் கணவர் தர்மலிங்கத்துடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பவித்ரா, தேன்மொழியிடம் இங்கு எதற்கு வந்தாய் என கேட்டுள்ளார். அதற்கு தேன்மொழி, உனது கணவருக்கு காலில் அடிபட்டு இருந்ததை பார்க்க வந்தேன் என கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பவித்ரா உனது கணவரிடம் இதுபற்றி கூறுகிறேன் என்று எச்சரித்துள்ளார்.

இதையடுத்து தேன்மொழி அங்கிருந்து சென்று விட்டார். சிறிதுநேரம் கழித்து தர்மலிங்கமும் வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் பவித்ரா அதிர்ச்சி அடைந்து கணவரின் செல்போனுக்கு தொடர்ச்சியாக தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

போலீசார் விசாரணை

அதன்பிறகு நீண்ட நேரம் கழித்து, பவித்ராவை அவருடைய கணவர் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரும், தேன்மொழியும் கொடக்கல் திட்டு பகுதியில் விஷம் குடித்து விட்டோம் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பவித்ரா அந்த தகவலை ரங்கசாமிக்கு போனில் கூறி உள்ளார்.

இதையடுத்து விஷம் குடித்த கள்ளக்காதல் ஜோடியை அவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்ற நிலையில் தேன்மொழி சிகிச்சை பலனின்றி இறந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தர்மலிங்கத்திடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

சங்ககிரி அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்ததில் பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்