போலீஸ் தேடிய வாலிபர் திருவையாறு கோர்ட்டில் சரண்

தஞ்சை அருகே இளம்பெண் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2022-12-23 21:00 GMT

திருவையாறு

தஞ்சை அருகே இளம்பெண் கொலை வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இளம்பெண் கொலை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வாத்தியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உடையார் மகள் வாசுகி (வயது25). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் மாயமானார்.இது குறித்து ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாசுகியை அதே ஊரை சேர்ந்த அவரது காதலன் மாதவன் (25), அவருடைய அண்ணன் திருகண்ணன் (36), இவர்களுடைய நண்பரான தஞ்சை பாளையப்பட்டியை சேர்ந்த புண்ணியமூர்த்தி (38) ஆகிய மூவரும் சேர்ந்து செங்கிப்பட்டிக்கு வரவழைத்து டி.பி.சாணிடோரியம் அருகே உள்ள குளம் ஒன்றில் வாசுகியை நீரில் அழுத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

கைது

இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் மாதவன், திருக்கண்ணன் ஆகிய இருவரையும் கீழத்தூவல் போலீசார் கொலை நடைபெற்ற இடத்துக்கு அழைத்து வந்து செங்கிப்பட்டி போலீசாருடன் இணைந்து குளத்தில் இருந்து வாசுகியின் மண்டை ஓடு, எலும்புகளை மீட்டனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு மாதவன், திருகண்ணன் இருவரையும் போலீசார் ராமநாதபுரத்துக்கு வேனில் கொண்டு சென்றனர். இந்நிலையில் நேற்று போலீசார் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கோர்ட்டில் மாதவன், திருகண்ணன் ஆகிய இருவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.வாசுகி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாதவனின் நண்பரான தஞ்சை பாளையப்பட்டியை சேர்ந்த புண்ணியமூர்த்தி (38) நேற்று காலை திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை நீதிபதி வருகிற 27-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்