வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 24 மணி நேரம் ஆற்றில் மிதந்து பெண் உயிர் தப்பிய அதிசயம்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண் 24 மணி நேரம் ஆற்றில் மிதந்து உயிர்பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஏற்கனவே 2 முறை அவர் சாவின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பிய தகவலும் வெளியாகி உள்ளது.

Update: 2022-11-11 21:15 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பாரதபள்ளி மடத்து விளையைச் சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி புஷ்பபாய் (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் மதியம் புஷ்பபாய் அங்கு தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். ஆனால் புஷ்பபாயை காணவில்லை.

இதனால் குளித்தபோது அவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என குடும்பத்தினர் பதற்றத்திற்கு ஆளானார்கள். இதுபற்றி தகவலறிந்த குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இறந்ததாக நினைத்து குடும்பத்தினர் சோகம்

இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு புஷ்பபாய் இறந்திருக்கலாம். அவருடைய உடல் எங்கு சிக்கி கிடக்கிறதோ? என குடும்பத்தினர் நினைத்து கண்ணீருடன் சோகத்தில் மூழ்கினர். பின்னர் நேற்று காலையில் 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. திக்குறிச்சி பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டபோது ஆற்றில் செடிகள், புதர்கள் நிறைந்த பகுதியில் ஒரு பெண்ணின் முகம் மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரிந்தபடி மிதந்தது. புஷ்பபாய் தான் பிணமாக கிடக்கிறார் என நினைத்து அங்கு படகை செலுத்தி கயிற்றால் இழுக்க முயன்றனர். அப்போது திடீரென அந்த முகத்தில் கண் அசைந்தது. இதனை பார்த்த தீயணைப்பு வீரர்கள் உடனே அருகில் சென்று அவரது கையை தொடவும் விரலும் படபடவென ஆடியது. இதனால் புஷ்பபாய்க்கு உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்த தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

உயிர் தப்பிய அதிசயம்

உடனடியாக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மயக்கத்திலேயே இருந்த அவர் சிகிச்சைக்கு பிறகு ஒரு மணி நேரத்தில் இயல்பான நிலைக்கு வந்தார். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண் 24 மணி நேரம் தண்ணீரிலேயே மிதந்து உயிருடன் தப்பிய அதிசயம் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது. நேற்றுமுன்தினம் மதியம் 12.30 மணியில் இருந்து நேற்று மதியம் 12.30 மணி வரை புஷ்பபாய் ஆற்றில் மிதந்து உயிர் பிழைத்துள்ளார்.

ஏற்கனவே 2 முறை சாவை வென்றவர்

புஷ்பபாய் இதற்கு முன் ஒருமுறை ஆற்றில் குளிக்க சென்றபோது அவர் வழுக்கி விழுந்துள்ளார். ஆனால் தலையில் அடிபடாததால் காயத்துடன் உயிர் தப்பினார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி புஷ்பபாய் தூக்கி வீசப்பட்டு மயக்கம் அடைந்தார். சிகிச்சைக்காக டெம்போவில் கொண்டு சென்றபோது திடீரென அசைவு ஏற்பட்டு உயிர் பிழைத்தார். தற்போது அவர் 3-வது முறையாக சாவின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியதாக அவரது குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்