திருவேங்கடம்:
திருவேங்கடம் அருகே குருவிகுளத்தை அடுத்த வாகைக்குளம் பஞ்சாயத்து ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (வயது 50), மணி மனைவி சொர்ணம்மாள் (55). தேசிய ஊரக தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலையில் வேலைக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் நாலுவாசன்கோட்டை பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று மாரியம்மாள், சொர்ணம்மாள் ஆகியோரின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். சொர்ணம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.