செட்டிச்சாவடியில் குப்பை சேகரித்த பெண், பொக்லைன் எந்திரம் மோதி பலி
செட்டிச்சாவடியில் குப்பை சேகரித்த பெண், பொக்லைன் எந்திரம் மோதி பலியானார்.
கன்னங்குறிச்சி:
செட்டிச்சாவடி சத்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி கண்ணம்மாள் (வயது 55). நேற்று வழக்கம் போல இவர் செட்டிச்சாவடியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை சேகரித்து கொண்டு இருந்தார். அதேநேரத்தில் குப்பைகளை பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணியில், அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக கண்ணம்மாளின் காலில் பொக்லைன் எந்திரம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பொக்லைன் எந்திரம் மோதி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியது.