நகைக்காக பெண் கொலை?-போலீசார் விசாரணை

திசையன்விளை அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் பிணமாக கிடந்தார். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து உறவினரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-01-07 20:40 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் பிணமாக கிடந்தார். அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து உறவினரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனியாக வசித்த பெண்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் மீரா சாகிபு. இவருடைய மகள் ஜான்சா பீவி (வயது 48). இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, அப்பகுதியில் உள்ள உறவினரின் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் பக்கத்து ஊரான பெட்டைகுளத்தில் நடந்த கந்தூரி விழாவுக்கு அப்பகுதியினர் சென்றனர். அங்கு ஜான்சா பீவி செல்லாததால், அவர் தனது வீட்டில் தனியாக இருந்தார்.

ரத்தக்காயத்துடன் பிணம்

இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் ஜான்சா பீவி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ஜான்சா பீவி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஜான்சா பீவி உடல் நலக்குறைவால் இறந்திருக்கலாம் என்று கருதி, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது அவரது காதில் ரத்தக்காயம் இருந்தது. அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல் மாயமானது தெரிய வந்தது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, ஜான்சா பீவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது ஜான்சா பீவியின் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

உறவினரை பிடித்து...

வீட்டில் தனியாக இருந்த ஜான்சா பீவியை மர்மநபர் கழுத்தை நெரித்து கொன்று நகைகளை பறித்து சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் ஜான்சா பீவியின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஜான்சா பீவியின் உறவினர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜான்சா பீவியின் பூர்வீக ஊர், திசையன்விளை அருகே செல்வமருதூர் ஆகும். திசையன்விளை அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்