கல்லால் தாக்கி பெண் படுகொலை
ஒட்டன்சத்திரம் அருகே கல்லால் தாக்கி பெண் படுகொலை செய்யப்பட்டார். நடத்தையில் சந்தேகப்பட்டு வெறிச்செயலில் ஈடுபட்ட கணவர் கைதானார்.
கட்டிட தொழிலாளி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). கட்டிட தொழிலாளி.
இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள தர்மத்துப்பட்டியை சேர்ந்த காயத்ரி (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு காயத்ரி திடீரென மாயமானார். இதனையடுத்து பல்வேறு இடங்களில் கார்த்திகேயன் தேடியும் காயத்ரி கிடைக்கவில்லை.
குழந்தைகள், கணவரை பிரிந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூர் வந்த காயத்ரி அங்கு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
நடத்தையில் சந்தேகம்
இது குறித்து தகவல் அறிந்த கார்த்திகேயன், தனது குழந்தைகளுடன் 2 நாட்களுக்கு முன்பு சாலைபுதூர் வந்தார். பின்னர் அவர்கள், அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென காயத்ரியை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட கார்த்திகேயன் அப்பகுதியில் தேடி பார்த்தார்.
அப்போது சாலைபுதூரில் உள்ள மேம்பாலம் அருகே காயத்ரி வேறு ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதனால் கார்த்திகேயன், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தார்.
கல்லால் தாக்கி கொலை
இதனையடுத்து கார்த்திகேயன் பாலம் அருகே சென்றார். இதனைக்கண்ட அந்த வாலிபர் அங்கிருந்து ஓடி விட்டார். இது தொடர்பாக காயத்ரியிடம் கார்த்திகேயன் கேட்டார்.
அப்போது கார்த்திகேயனுக்கும், காயத்ரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், அங்கு கிடந்த கல்லால் காயத்ரியின் தலையில் தாக்கினார். இதில் அவர் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனையடுத்து கார்த்திகேயன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தலையில் படுகாயம் அடைந்த காயத்ரி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை, கணவர் கொலை செய்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.