மின்னல் தாக்கி பெண் பலி

உளுந்தூர்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-04-01 18:55 GMT

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதல் வெயில் சுட்டெரித்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன.

அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் சுமார் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. சாலையில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு மழை பெய்ததால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி சென்றதை காணமுடிந்தது. மேலும் சிலர் மழையில் செல்லமுடியாமல் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தினர். பின்னர் மழை நின்றதும் புறப்பட்டு சென்றதையும் காணமுடிந்தது.

மின்கம்பம் சாய்ந்து விழுந்தது

இதேபோல் தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்பட பல்வேறு பகுதிகளில் காற்று மற்றும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் தியாகதுருகம் பிள்ளையார் கோவில் அருகில் இருந்த மின்கம்பம் பலத்த காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அடியோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்ஊழியர்கள் விரைந்து சென்று மின்கம்பத்தை சீரமைத்தனர்.

மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மேல்மலையனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது.

பெண் பலி

இதனிடையே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி வளர்மதி (வயது 39). விவசாய தொழிலாளி. இவர் நேற்று அரியந்தக்கா சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மழையில் நனையாமல் இருக்க அங்கு சாலையோரம் இருந்த புளிய மரத்தடியில் வளர்மதி ஒதுங்கினார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ரிஷிவந்தியம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வளர்மதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்