சேரன்மகாதேவியில் பெண் வெட்டிக்கொலை - மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
சேரன்மகாதேவியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை வெட்டிக்கொன்ற நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிள்ளையார் இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 56). இவர் நேற்று இரவில் தனது வீட்டில் இருந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் இவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இது பற்றி தகவல் அறிந்த சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ்ராஜன், கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் மாரியம்மாளை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை செய்தான் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையாளி எந்த வழியாக தப்பி சென்றான் என்பது குறித்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரவில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.