கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்ற பெண் ஊழியர் கைது
ஊட்டி ரேஷன் கடையில் இருந்து கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்ற பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.;
ஊட்டி
ஊட்டி ரேஷன் கடையில் இருந்து கள்ளச்சந்தையில் ரேஷன் அரிசி விற்ற பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் கடைகள்
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், குந்தா, கோத்தகிரி, பந்தலூர் ஆகிய 6 தாலுகாக்களில் கூட்டுறவுத்துறை சார்பில் 335 ரேஷன் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் 28 கடைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், எஸ்டேட் நிர்வாகத்தினரால் நடத்தப்படும் கடைகள் என மொத்தம் 404 ரேஷன் கடைகள் உள்ளன.
இந்த கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்தநிலையில் ஊட்டி மேல் தலையாட்டு மந்து பகுதியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த 19-ந் தேதி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் சந்தியா, ஊட்டி அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர்.
ஊழியர் கைது
அப்போது பதிவேடுகளில் இருந்ததை விட, ரேஷன் கடையில் 3,500 கிலோ அரிசி பற்றாக்குறையாக இருந்தது.
இதுகுறித்து ரேஷன் கடை விற்பனையாளர் அமுதாவிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரிசி கெட்டுப்போய் விட்டதால் கோரிசோலா பகுதியில் கொட்டி விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஊட்டி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் நீலகிரி கூட்டுறவு சங்க இணை பதிவாளர் வாஞ்சிநாதன் ஆய்வு நடத்தி, ரேஷன் கடை விற்பனையாளரான அமுதா என்பவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்தார்.
இதற்கிடையே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், அமுதா ரேஷன் அரிசியை கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.